நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கில் அவர் குற்றவாளி என மே 30ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்த ஒருவர் இவ்வாறு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தாம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை மறைக்க 77 வயது டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்குப் பணம் தந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதை மறைக்க, சில ஆவணங்கள் பொய்யானவை என்று காட்டவும் அவர் முயற்சி செய்தார்.
இதன் தொடர்பில் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த 12 உறுப்பினர்கள் கொண்ட நடுவர்கள் (ஜூரர்கள்) குழு அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் குற்றவாளி என ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
ஜூலை 11ஆம் தேதி இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
முன்னதாக, ஜூலை 15ஆம் தேதி குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடனை வென்று மீண்டும் வெள்ளை மாளிகையில் குடியேற டிரம்ப் முயல்வார் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பால் அதிபர் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதை அரசியல் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
தாம் தவறேதும் செய்யவில்லை என்கிறார் டிரம்ப். அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும்.
தீர்ப்பளிக்கப்பட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது அவமானம். ஊழல்வாதியான நீதிபதி ஈடுபட்ட இந்த வழக்கில் மோசடி நடைபெற்றுள்ளது,” என்று கூறினார்.
“நவம்பர் 5ஆம் தேதி மக்கள் அளிக்கப்போவதுதான் உண்மையான தீர்ப்பு,” என்றார் அவர். அத்துடன் தாம் அப்பாவி என்றும் டிரம்ப் கூறினார்.
அவருக்கு அதிகபட்சமாக நாலாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இதற்கு முன்னர் இத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தகால சிறைத்தண்டனையோ அபராதமோ நன்னடத்தைக் கண்காணிப்போ விதிக்கப்பட்டதுண்டு.
சிறைக்குச் சென்றாலும் அவர் பிரசாரம் மேற்கொள்ளத் தடையேதுமில்லை. தேர்தலில் வெற்றிபெற்றால் அவர் அதிபராகப் பதவியேற்கவும் முடியும்.

