கலிமந்தான் புகைமூட்டம் ஜகார்த்தா வான்வெளியையும் நிரப்பியது

கலிமந்தான் புகைமூட்டம் ஜகார்த்தா வான்வெளியையும் நிரப்பியது

படம்: ஏஎஃப்பி

17 Oct 2026 - 5:02 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியா முழுவதும் பரவியுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புக் குழுவினர் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், கலிமந்தான் காட்டுத் தீயில் இருந்து கிளம்பிய புகை ஜகார்த்தாவை எட்டியிருக்கிறது என்று அந்நாட்டின் வானிலை, பருவநிலை, புவியியல் நிர்வாக அமைப்பு (பிஎம்கேஜி) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு ‘ஹிமாவாரி-9’ செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள், ஜகார்த்தா, மேற்கு ஜாவாவின் சில பகுதிகளில் புகை பரவியிருப்பதைக் காட்டுகின்றன.

நிலப்பரப்பில் இருந்து ஏறக்குறைய 2 கி.மீ முதல் 3 கி.மீ உயரத்தில் புகைமூட்டம் கண்டறியப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வீசும் மாறுபட்ட காற்று சுழற்சி முறைகள், கலிமந்தானில் இருந்து ஜாவாவை நோக்கிப் புகையைக் கொண்டு செல்லக்கூடும் என்று அமைப்பின் செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வுக் குழுவின் தலைவர் அல்போன் செப்ரியாந்தோ தெரிவித்தார்.

“புகைமூட்டம், ஜகார்த்தாவை வந்தடைந்துள்ளது. ஆனால் அது வளிமண்டலத்தின் மேல் பகுதியிலேயே உள்ளது. இன்னும் நிலப்பரப்பை அடையவில்லை. இருப்பினும் காற்றின் வேகம் குறைந்தால், அது ஒரு மெல்லிய அடுக்காக நிலப்பரப்பில் இறங்கக்கூடும்,” என்றும் அவர் கூறினார்.

தலைநகர் ஜகார்த்தாவில் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்களின் புகை, தொழிற்சாலை நடவடிக்கைகள், திறந்தவெளி எாிப்பு ஆகியவை காரணங்களாக இருப்பதையும் பிஎம்கேஜி சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்இந்தோனீசியாபுகைமூட்டம்காட்டுத்தீபருவநிலைஜகார்த்தாவானிலை

தொடர்புடைய செய்திகள்