ஹனோய்: கால்மேகி சூறாவளியால் வியட்னாமில் ஐந்து பேர் மாண்டுவிட்டனர். 7 பேர் காயமுற்றனர். சூறாவளி, பலத்த காற்றையும் பெருமழையையும் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூறாவளி வியாழக்கிழமை பின்னிரவில் கரையைக் கடந்தது. இந்த ஆண்டில் (2025) உலகைப் புரட்டிப்போட்ட சூறாவளிகளில் அதுவும் ஒன்று.
வியட்னாமின் மத்திய வட்டாரத்தில் அது கடந்துசென்ற பாதையிலிருந்து முன்கூட்டியே ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வாரத் தொடக்கத்தில் கால்மேகி, பிலிப்பீன்சில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அதில் 188 பேர் மரணமடைந்தனர். 125க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. பெருவெள்ளத்தையும் அது ஏற்படுத்தியது.
நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. இருப்பிடத்தைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் கால்மேகி புயல் செல்வதாக வியட்னாமின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. மத்திய வட்டாரத்தின் கடலோரப் பகுதிகளில் அலைகள் 10 மீட்டர் வரை உயர்ந்தன. கிட்டத்தட்ட 2,800 வீடுகள் சேதமடைந்தன. வீட்டுக் கூரைகள் பறந்ததாகவும் மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்ததாகவும் கூறப்பட்டது. ஏறக்குறைய 1.3 மில்லியன் பேர் மின்சாரச் சேவை தடைபட்டதால் சிரமப்பட்டனர். குவாங் நாய் வட்டாரத்தில் ரயில்வே பாதிக்கப்பட்டதாக வியட்னாமிய செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டன. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஜியா லாய் மாநிலத்திலிருந்து 260,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான வட்டாரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாண்டில் வியட்னாமைத் தாக்கிய 13வது சூறாவளி கால்மேகி. தேடுதல், மீட்புப் பணிகளுக்காக 268,000க்கும் மேற்பட்ட படைவீரர்கள் தயார்நிலையில் இருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் வேளாண் நிலப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கால்மேகி சூறாவளி, தாய்லாந்தையும் லாவோசையும் நோக்கி நகர்கிறது.

