நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சில நாள்களில் நடக்கவுள்ளதால் வாக்கு சேகரிக்கும் பணியில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க தொழிற்சங்கங்களின்கீழ் இருக்கும் சில அமைப்புகளில் உள்ள ஆண்களின் வாக்குகளை பெறுவதில் கமலா ஹாரிஸ் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக அமெரிக்க தொழிற்சங்கங்கள் பல ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவது வழக்கம். அதனால் கமலா ஹாரிஸ் தொழிற்சங்கங்களில் உள்ளவர்களுக்கு கைபேசி மூலம் அழைத்தோ அல்லது அவர்களின் வீடுகளுக்கு சென்றோ வாக்குகளைப் பெற வேண்டும் என்று மூத்த தொழிற்சங்கவாதிகள் கருதுகின்றனர்.
கமலா ஹாரிசும் ஜோ பைடனும் தொழிற்சங்களுக்கு உதவும் வகையில் அவர்களின் வேலை ஒப்பந்தகளுக்கும் தொழிலாளர்களின் உரிமைக்கும் குரல் கொடுத்துள்ளனர்.
அதேநேரம் டோனல்ட் டிரம்ப்பும் தொழிலாளர்கள் மத்தியில் சற்று பிரபலமாக உள்ளார். இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்பதால் தொழிற்சங்களின் வாக்குகள் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
சில தொழிலாளர்கள் டிரம்ப் பக்கம் சென்றால் தேர்தல் முடிவுகளில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கட்டுமானம், கப்பல், உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் ஆண்கள் பலர் வெள்ளை இனத்தவர். அதனால் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தருவதில் அவர்கள் தயக்கம் காட்டுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தேர்தல் குறித்து சில ஆய்வுகளை நடத்தியது. அதில் கமலா ஹாரிஸ் பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். குறிப்பாக வெள்ளை இனப் பெண்கள் கமலாவுக்கு நல்ல ஆதரவு தருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மறுபக்கம் டிரம்ப்பிற்கு 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்கள் கொடுத்த ஆதரவைவிட தற்போது ஆண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆண் ஆதிக்க மனப்போக்கு கொண்டவர்கள் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பது கடினம் என்பதால் டிரம்ப் தரப்பு உற்சாகத்தில் உள்ளது.
கமலா ஹாரிஸ் தொழிற்சங்கங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திருந்தாலும் டிரம்ப்புக்கும் தொழிலாளிகளுக்கும் சில கொள்கைகள் ஒத்துபோவதாகக் கூறப்படுகிறது. அது தேர்தலின் முடிவுகளை மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.