கராச்சி கடைத்தொகுதி தீச்சம்பவம்; 50 பேர் மரணம்

கராச்சி கடைத்தொகுதி தீச்சம்பவம்; 50 பேர் மரணம்

படம்: ஏஎஃப்பி

22 Jan 2026 - 11:28 am

2 mins read

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தீச்சம்பவம் ஏற்பட்டது.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50க்கு அதிகரித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை (ஜனவரி 21) கல் பிளாசா கடைத்தொகுதியில் நடத்தப்பட்ட மீட்புப் பணியில் ஏறத்தாழ 25 சடலங்கள் மீட்கப்பட்டன. அவை கட்டடச் சிதைவுகளுக்கு இடையே சிக்கியிருந்தன.

கராச்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆக மோசமான தீச்சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

திருமண உடைக்கான கடைகள், விளையாட்டுப் பொருள்கள் கடைகள், மளிகைப் பொருள்களுக்கான பேரங்காடி என 1,200க்கும் அதிகமான கடைகளைக் கொண்ட கல் பிளாசாவில் ஜனவரி 17 மாலை நேரத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டதாகவும் அது கடைத்தொகுதியின் மற்ற பகுதிகளுக்கு வேகமாகப் பரவியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க கிட்டத்தட்ட மூன்று நாள்கள் தீயணைப்பு அதிகாரிகள் போராடினர். தீயால் கடைத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் நாசமாகின.

“மீட்புப் படையினர் 20 முதல் 25 சடலங்களை மீட்டுள்ளனர். அவற்றை மரபணு முறையில் சோதனை செய்து அடையாளம் காண மருத்துவமனைக்குச் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சடலங்களை அடையாளம் காணுவதில் சிரமம் உள்ளதால் மாண்டோர் எண்ணிக்கையைச் சரியாகக் கூறமுடியவில்லை,” என்று கராச்சியின் துணைக் காவல்துறை ஆணையர் ஜாவித் நபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) நடத்தப்பட்ட மீட்புப் பணி முடிவில் 29 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீச்சம்பவத்தில் மாண்டவர்களுக்கு கடைத்தொகுதிக்கு அருகே உள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மெழுகுவர்த்தி ஏத்தியும் மாண்டதாக நம்பப்படும் சிலரின் புகைப்படங்களை ஏந்தியும் அஞ்சலி அணுசரிக்கப்பட்டது.

இதுவரை 84 பேர் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்