கோத்தா பாரு: மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான கிளந்தானில் கடந்த சில வாரங்களாக மோசமான வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சாலைகளும் வீடுகளும் பெருத்த சேதமடைந்துள்ளன. வெள்ள நீரில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மலேசியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஆறு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, ஐந்தே நாள்களில் கொட்டித் தீர்த்தது.
மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஏறக்குறைய 1 பில்லியன் ரிங்கிட் (S$303 மில்லியன்) செலவாகும் எனப் பிரதமர் அன்வார் இப்ராகிம் டிசம்பர் 3ஆம் தேதி மதிப்பிட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) முதல் டிசம்பர் 14 வரை ‘இரண்டாவது அலை’யாக கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதால், மலேசியர்கள் அதற்குத் தயாராகி வருகின்றனர். இதனால் மீண்டும் பெருத்த சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இம்முறை பாகாங், ஜோகூர் மாநிலங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது. சாபா, சரவாக் மாநிலங்களில் டிசம்பர் இறுதி முதல் 2025 மார்ச் வரை வெள்ளம் எதிர்பார்க்கப்படுவதாக மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி கூறினார்.
“இரண்டாவது அலை, முதல் அலையைப்போல கடுமையானதாக இருக்காது என நாங்கள் நம்புகிறோம். எனினும், அது ஜோகூரையும் பாகாங்கையும் கூடுதலாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்றார் அவர்.
2024ல் பெய்த கனமழையே பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு என அதிகாரிகள் கூறியுள்ளனர். தென்சீனக் கடலில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், மழைநீரால் நிரம்பியுள்ள ஆறுகளிலிருந்து நீர் கடலுக்கு விரைந்து ஓடுவது சிரமமாக உள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி வீசிய முதல் ‘வெள்ள அலை’யால் மலேசியத் தீபகற்பத்தில் 11ல் 10 மாநிலங்களில் 142,000க்கும் அதிகமானோர் தற்காலிகமாக புகலிடம் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கிளந்தானில் மட்டும் ஏறக்குறைய 91,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பினாங்கு மக்கள் மட்டும் இந்தப் பாதிப்பிலிருந்து விட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுநாள் வரை, வெள்ளத்தால் ஆறு மலேசியர்கள் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையில் ஆக மோசமாகப் பாதிக்கப்படும் மாநிலமாக கிளந்தான் உள்ளது.