நைரோபி: கென்யாவில் உள்ள தொடக்கப் பள்ளி தங்குவிடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் மரணமடைந்தனர் என்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று அந்நாட்டு காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிபர் வில்லியன் ருட்டோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
ஹில்சைட் என்டராஷா அகாடமி என்ற பெயரில் கென்யாவின் நியேரி என்ற இடத்தில் இருக்கும் அந்தப் பள்ளிக்கு கூடுதல் மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ரெசிலா ஒனியாங்கோ என்ற அந்தப் பேச்சாளர் ‘ஹாட் 96 எஃப் எம்’ என்ற வானொலி செய்தியில் தெரிவித்தார். இது குறித்த மேல்விவரங்களை அதிகாரிகள் பின்னர் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தீ விபத்தில் நாங்கள் 17 மாணவர்களை இழந்துவிட்டோம், மேலும் 14 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்,” என்று ஒனியாங்கோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முன்னதாக, அந்தத் தீ மாணவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு எரித்துவிட்டதாக சிட்டிசன் தொலைக்காட்சி நிறுவனம் கூறியது.