தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷ் பட்டேல் பதவியேற்பு

2 mins read
பகவத்கீதை மீது கைவைத்து சத்திய பிரமாணம்
78ae9524-0ea3-4887-a616-9fd8c7dce8dd
வெள்ளை மாளிகையில் தலைமைச் சட்ட அதிகாரி பாம் போண்டி(வலம்), கேஷ் பட்டேலுக்கு(இடம்) பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான மத்திய புலனாய்வுத் துறையின் (எஃப்பிஐ) இயக்குநராக பிப்ரவரி 21ஆம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷ் பட்டேல் பதவி ஏற்றுக் கொண்டார்.

இது, தமது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என கேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

பகவத் கீதை புத்தகத்தின்மீது கைவைத்து அவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக திரு பட்டேல் இயக்குநராவதற்கு செனட் சபை 51-49 என வாக்களித்து அவருக்கு அங்கீகாரம் அளித்தது. திரு டோனல்ட் டிரம்ப்பின் குடியசுக் கட்சி உறுப்பினர்கள் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.இருந்தாலும் வியாழன் அன்று செனட்டில் திரு. பட்டேல் 51-49 என்ற வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டார்.

எஃப்பிஐ இயக்குநராகப் பதவியேற்ற பிறகு பேசிய கேஷ் பட்டேல், நாட்டின் முதன்மையான மத்திய சட்ட அமலாக்க நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பை தனது வாழ்க்கையின் “மிகப்பெரிய மரியாதை” என்று குறிப்பிட்டார்.

கேஷ் பட்டேல் பதவியேற்புக்கு முன்பு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டோனல்ட் டிரம்ப், எஃப்பிஐ பொறுப்பில் அவர் எப்போதும் சிறந்தவராக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எஃப்பிஐ அதிகாரிகள் அனைவரும் அவரை விரும்புவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு டோனல்ட் டிரம்ப்பின் அரசியல் ஈடுபாட்டில் முக்கிய பங்கு வகித்த கேஷ் பட்டேல் அவரது நம்பிக்கைக்கு உரியவர் ஆனார்.

இதனால் கேஷ் பட்டேல் தன்னிச்சையாக செயல்படுவாரா என ஜனநாயகக் கட்சியினர் கவலை தெரிவித்தனர்.

திரு. டிரம்பிற்கு திரு பட்டேல் விசுவாசமாக செயல்படுவார் என்றும், எஃப்பிஐயின் சட்ட அமலாக்க அதிகாரங்களை அதிபருக்கு ஆதரவாக துஷ்பிரயோகம் செய்வார் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

ஆனால் “அரசியல் தலையீடு இல்லாமல் அமலாக்க நடவடிக்கைகள் இருக்கும் என்றும் எந்தவிதப் பழிவாங்கலும் இருக்காது,” என்றும் கேஷ் பட்டேல் உறுதி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்