கோலாலம்பூர்: வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் இடைமறிக்கப்பட்ட ஒரு கப்பலில் இருந்த 1.16 டன் கெட்டமின் ஹைட்ரோகுளோரைட் போதைப் பொருள் கடத்தலை ஒரு மலேசிய போதைப்பொருள் கும்பல் திட்டமிட்டு நடத்தியதா என்பதைத் தீர்மானிக்க, மத்திய போதைப்பொருள் புலனாய்வாளர்கள் இந்தோனீசிய சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மங்கோலியக் கொடியுடன் கூடிய 57 மீட்டர் நீளமுள்ள ‘எம்டி குளோபல் 168’ என்ற அந்தக் கப்பல், அதன் பதிவுசெய்யப்பட்ட உரிமையை ஜோகூரைத் தளமாகக் கொண்ட ‘மக்மூர் மரின் பெட்ரோலியம்’ நிறுவனத்துடன் இந்தோனீசிய அதிகாரிகள் தொடர்புபடுத்தியதைத் தொடர்ந்து, அக்டோபர் 20ஆம் தேதியன்று தஞ்சோங் பாலாய் அசஹான் கடற்பகுதியில் இடைமறிக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு கறுப்புச் சந்தையில் 3.48 டிரில்லியன் ரூப்பியா அல்லது கிட்டத்தட்ட 800 மில்லியன் ரிங்கிட்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹுசைன் ஒமார் கான், இந்தப் பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றல் குறித்து, மலேசிய காவல்துறைக்கு, இந்தோனீசிய காவல்துறை நேற்று முறைப்படி அறிவித்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த வழக்கு குறித்த கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கும், தொடர்புடைய உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, இந்தோனீசிய தேசிய காவல்துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்.
“மலேசியாவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்த எவரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறியவும் நாங்கள் தகவல்களைக் கோருவோம்,” என்று அவர் கூறினார்.
