சீனா- ரஷ்யா இடையிலான இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் புதுப்பிப்பு

பெய்ஜிங் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர்கள்

சீனா- ரஷ்யா இடையிலான இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் புதுப்பிப்பு

2 mins read
a04ada8c-a6c3-4a52-a96c-98b756bfe021
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் முக்கிய ஆவணங்களில் புதன்கிழமை (மே 20) கையெழுத்திட்டனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இரு நாடுகளையும் இணைக்கும் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்தைப் புதுப்பித்துள்ளனர்.

சீனாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் வணிகம், தொழில்நுட்பம் சார்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் புதன்கிழமை (மே 20) கையெழுத்திட்டபோது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

எனினும், இத்திட்டத்தின் விரிவான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட , ‘பவர் ஆஃப் சைபீரியா 2’ ஒப்பந்தம் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நிலையில், இத்திட்டம் தொடர்பாக இரு நாடுகளும் தற்போது பொதுவான புரிதலை எட்டியுள்ளதாக புட்டினின் உதவியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனா சென்றுள்ள புட்டினுக்கு  சிறுவர்கள் சீன, ரஷ்யக் கொடிகளை அசைத்து  உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
சீனா சென்றுள்ள புட்டினுக்கு சிறுவர்கள் சீன, ரஷ்யக் கொடிகளை அசைத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்கில் புட்டினும் ஸி ஜின்பிங்கும் பேச்சு நடத்திய பின்னர், வெளியிடப்பட்ட நீண்ட கூட்டு அறிக்கையில் ரஷ்ய எரிவாயு விநியோகம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய அளவிலான திருப்புமுனை எதையும் எட்டியதற்கான அறிகுறிகள் இல்லை என்று செய்திகள் தெரிவித்தன.

சீனாவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு மக்கள் மாமன்றத்தில் மரியாதை அணிவகுப்பு, பீரங்கி முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உத்திபூர்வ உறவின் முன்னேற்றத்தை இருநாட்டுத் தலைவர்களும் மெச்சினர்.

இரு நாடுகளும் நீண்டகால உத்தியில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் நியாயமான உலகளாவிய நிர்வாக முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று ஸி ஜின்பிங் கூறியதாக சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி தெரிவித்தது.

ரஷ்யா - சீனா இடையிலான விரிவான பங்காளித்துவம், உத்திபூர்வ ஒத்துழைப்பு நவீன உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புட்டின் கூறினார்.

மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையில் ரஷ்யா நம்பகமான எரிசக்தி வழங்குநராகத் தொடர்வதைச் சுட்டிய திரு புட்டின், உலகளாவிய நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்த உறவு உதவுவதாகக் கூறினார்.

புட்டின், அதிபர் ஸி ஜின்பிங்கை 2027ல் ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பொருளியல் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு, சீனாவின் பொருளியல் ஆதரவு மிக முக்கியம் என்று புட்டின் குறிப்பிட்டார்.

ரஷ்யா-சீனா கல்வி ஆண்டு 2026-2027’ தொடக்க விழாவிலும் இரு தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பெய்ஜிங்கில் புதன்கிழமை (மே 20) பேச்சு வார்த்தை நடத்தினர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பெய்ஜிங்கில் புதன்கிழமை (மே 20) பேச்சு வார்த்தை நடத்தினர். - படம்: ஏஎஃப்பி

உக்ரேன் போரினால் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளியல் தடைகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான ‘எல்லையற்ற’ பங்காளித்துவம் வலுவடைந்துள்ளது.

2022ல் உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து ரஷ்யா - சீனா இடையிலான உறவு மேலும் ஆழமடைந்துள்ளது. அப்போது முதல் அதிபர் புட்டின் ஒவ்வோர் ஆண்டும் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது ரஷ்ய அதிபரின் 25வது சீனப் பயணமாகும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெய்ஜிங் வருகையைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குள்ளாகவே இடம்பெறும் சீன - ரஷ்யச் சந்திப்பு உலகளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்