சீனா ஏறத்தாழ உலகின் 60 விழுக்காடு அரிய மண்வளங்களை விநியோகம் செய்துவருகிறது.
அதோடு, அவற்றின் சுத்திகரிப்பையும் 90 விழுக்காடு உள்நாட்டிலேயே கட்டுப்படுத்துகிறது. அதனால் உலகின் பல தொழில்துறைகள் சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பணிய வேண்டியுள்ளது.
அதுவே புவிசார் அரசியலில் சீனாவுக்கு சாதகமாக அமைகிறது.
அந்நாட்டைச் சாராமல் ஜி7 (G-7) உறுப்பு நாடுகளும், கனிம வளங்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும் ஒன்றிணைந்து அடுத்த ஆண்டு மாநாடு நடத்த திட்டமிடுவதாக ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் வியாழக்கிழமை (டிசம்பர் 25) தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் நடப்பதாக திட்டமிடப்படும் அந்த ஒருங்கிணைந்த சந்திப்பில் அந்தந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்று அத்தியாவசிய கனிமவளங்களை எவ்வாறு சீனாவைச் சார்ந்திறாமல் விநியோகம் செய்வது என்பதை விவாதிப்பர்.
ஜி7 அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அந்த நாடுகளுடன் ஆஸ்திரேலியா, சில்லே, இந்தியா, மெக்சிகோ, தென்கொரியா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இவ்வாண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் இணையத்தில் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
சீனாவை நேரடியாகக் குறிப்பிடாமல், கனிம வளங்களுக்கு ஒரே நாட்டைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் இணக்கம் கண்டனர்.
இயந்திரங்கள், மின்வாகனங்கள், பகுதிமின்கடத்திகள் போன்றவற்றின் உற்பத்திக்கு பலவகையான அரிய கனிமவளங்கள் அத்தியாவசியமாகும்.
தொடர்புடைய செய்திகள்
மிகப்பெரிய கனிமவள ஏற்றுமதியாளராக சீனா, தொழிலாளர்களைத் தவறாக பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவருகிறது என்று நிபுணர்கள் குறைகூறி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த நாடுகளின் மாநாட்டில், அரியவகை மண்வள உற்பத்தியின் செயல்முறைக்கான அனைத்துலக விதிமுறைகள் உருவாக்கப்படும்.
கனிம வளங்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியா, சில்லெ நாடுகளிடம் நிலையான, பாதுகாப்பான முறையில் அவற்றை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வரைமுறைகளும் ஏற்படுத்தப்படும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடத்திவரும் அமெரிக்க நிதித் துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், கனிம வளங்களில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தை ஆராய விரும்புகிறார் என்று ஜப்பானின் குயோடோ செய்தி ஊடகம் கூறியுள்ளது.
ஜப்பானிய நிதி அமைச்சர் சட்சுகி கட்டாயமா, ஜனவரி மாதம் 12ஆம் தேதிக்கு பிறகு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் ஒருங்கிணைந்த நாடுகளின் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

