பிலிப்பீன்ஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சி திடீர் மரணம்

2 mins read
64f8ee99-3c58-48b9-afd0-b84848467477
முன்னாள் பொதுப் பணித் துறை துணைச் செயலாளரான 63 வயது மரியா கெட்டலினா காபிரெல். - படம்: இங்குவாய்ரர் நெட்

பிலிப்பீன்ஸ்: பிலிப்பீன்சின் மிகப்பெரிய ஊழல் வழக்கில் சிக்கிக்கொண்ட முன்னாள் மூத்த அரசாங்க நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை (டிசம்பர் 18) மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மேட்டுப் பகுதியிலிருந்து அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பொதுப் பணித் துறை துணைச் செயலாளரான 63 வயது மரியா கெட்டலினா காபிரெல், பெங்குவெட் மாநிலத்தில் உள்ள கென்னொன் சாலைக்கு அருகே உள்ள செங்குத்தான மலைப்பகுதியிலிருந்து தவறி விழுந்ததாகத் தகவல்கள் குறிப்பிட்டன.

பிற்பகல் 3 மணிவாக்கில் மலைப்பகுதியில் உள்ள சாலை ஓரமாக தம்மை இறக்கிவிடும்படி திருவாட்டி காபிரெல் கேட்டுக்கொண்டதாக அவரது தனிப்பட்ட கார் ஓட்டுநர் கூறினார்.

அதையடுத்து அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குச் சென்று இரண்டு மணி நேரம் கழித்து வந்தபோது திருவாட்டி காபிரெலைக் காணவில்லை என்று ஓட்டுநர் சொன்னார்.

திருவாட்டி காபிரெல் தங்கியிருந்த ஹோட்டலிலும் தேடிப் பார்த்த பிறகு மாலை 7 மணியளவில் ஓட்டுநர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து ஒரு மணி நேரத்துக்குப் பின் திருவாட்டி காபிரெலின் உடல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

திருவாட்டி காபிரெலின் மரணத்தில் எந்தவிதச் சதியும் இதுவரை தென்படவில்லை என்ற மாநில உள்ளூர் அரசாங்க அமைச்சர் ஜொன்விக் ரெமுல்லா, அது விபத்தா அல்லது தற்கொலையா என்பதைக் கூறவில்லை.

குற்றம் நடந்த இடத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறிய திரு ரெமுல்லா, ஓட்டுநரும் விசாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

திருவாட்டி காபிரெலின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலைக் கூராய்வு செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றில் பணியாற்றியபோது திருவாட்டி காபிரெல் கையூட்டு முறையை வழிநடத்திய முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

அந்தக் கையூட்டு நடைமுறை மூலம் பல்வேறு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் பில்லியன்கணக்கான தொகை பயன்பட திருவாட்டி காபிரெல் உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்