சிறந்த படைப்பிரிவுகளாக மாறுங்கள்: வடகொரிய ராணுவத்திற்கு கிம் அழைப்பு

சிறந்த படைப்பிரிவுகளாக மாறுங்கள்: வடகொரிய ராணுவத்திற்கு கிம் அழைப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

24 Oct 2026 - 6:05 pm

2 mins read

சோல்: பியோங்யாங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், உலகின் ஆகப் பலமிக்க தரைப்படையாக உருவாகப் பயிற்சி பெறுமாறு அந்நாட்டு ராணுவத்தை வலியுறுத்தினார்.

இதை ஒரு ராணுவப் புரட்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் நடந்த அந்தக் கூட்டத்தில் ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளும் சிறந்த படைப்பிரிவுகளாக மாற வேண்டும் என்று திரு கிம் கேட்டுக்கொண்டார்.

சில நாள்களுக்கு முன்னர் தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் உள்ள ராணுவமற்ற பகுதியில் ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு தென்கொரியா அமைதிக்காகப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், இப்போது திரு கிம்மின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

1953ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் போர் இல்லை என்றாலும் இரு நாடுகளுக்கு இடையில் இப்போதும் பதற்றம் உள்ளது.

அண்மையில், வடகொரியா புதிய வகைத் துல்லிய நீர்மூழ்கிக் குண்டு, நடுத்தரத் தூர ஏவுகணை உள்ளிட்ட பல ஆயுதங்களைச் சோதித்துள்ளது. இவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டது.

சீனா சென்ற கிம்

இதற்கிடையே, திரு கிம் ஜோங் உன் சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் கட்டப்பட்ட புதிய பாலம் வழியாக சீனாவின் டாண்டோங் நகரைச் சென்றடைந்தார்.

அந்தத் தகவலைத் தென்கொரிய அரசு வட்டாரத்தை மேற்கோள்காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவும் வடகொரியாவும் தங்களுக்கு இடையிலான முக்கிய நில எல்லையை அக்டோபரில் அதிகாரபூர்வமாகத் திறந்தன. பல ஆண்டுகள் தொய்வடைந்திருந்த வர்த்தகத்தைச் சீரமைப்பது அதன் நோக்கமாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்ஜிங்கில் நடந்த 80வது வெற்றி நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கிம், சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தார். அதன்பிறகு ஜூன் மாதம் ஸி ஜின்பிங் வடகொரியாவுக்கு அரசதந்திரப் பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். ஆனால், 2026ல் அவர் கிம்மைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சீனாவடகொரியாதென்கொரியா