பிரெஞ்சு பள்ளியில் கத்திக்குத்துத் தாக்குதல்

2 mins read
e1c71837-4340-4ce3-8c31-f5a2bdbf40fe
பிரான்ஸில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். - படம்: ஏஎஃப்பி

பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள நன்டாஸ் நகரின் தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது சிறுவன் மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொன்றதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் மூன்று மாணவர்கள் காயமுற்றனர்.

அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று குறிப்பிட எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 24) பிற்பகல் வாக்கில் நன்டெஸ் நகரில் உள்ள நோட்டர்டேம் டீ டூட்ஸ் எய்ட்ஸ் பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

கத்திக்குத்து நடத்திய சந்தேக நபரை ஆசிரியர் ஒருவர் மடக்கிப் பிடித்ததை அடுத்து ஆடவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அவசரச் சேவை அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். பள்ளியிலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மதிய உணவு சமயத்தின்போது எழுப்பப்பட்ட எச்சரிக்கை ஒலியைக் கேட்டு மாணவர்கள் வகுப்பறைகளுள் இருக்கும்படி உத்தரவிடப்பட்டனர் என்றும் ஒருசில மாணவர்கள் பள்ளியில் ஓடினர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

கத்திக்குத்துத் தாக்குதல் குறித்து பெற்றோரிடம் அறிவித்த பள்ளி, அவர்கள் பாதுகாப்பாக வகுப்பறைகளில் இருந்ததைக் குறிப்பிட்டது.

பாலர்க் கல்வியிலிருந்து உயர்நிலை வரை பள்ளியில் ஏறக்குறைய 2,000 மாணவர்கள் பயில்வதாகக் கூறப்படுகிறது.

பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோன் எக்ஸ் (X) தளத்தில் கத்திக்குத்துத் தாக்குதலை உறுதி செய்ததோடு சம்பவ இடத்தில் இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.

“அவர்களின் உதவியால் நிலைமை மோசமாவது தடுக்கப்பட்டது. அவர்களின் துணிச்சல் மதிக்கத்தக்கது,” என்று திரு மெக்ரோன் சொன்னார்.

தாக்குதலை அடுத்து, பிரதமர் ஃப்ரொன்சுவா பாய்ரு பள்ளிகளில் கத்திகளுக்கான சோதனையைத் தீவிரப்படுத்தும்படி வலியுறுத்தினார்.

நன்டெஸ் அரசாங்க வழக்கறிஞர் அன்டொய்ன் லிரோய் பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் இனிவரும் நாள்களில் செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்