மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரின் கடைத்தொகுதி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் கடுமையாகக் காயம் அடைந்த ஓர் ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புறநகரப் பகுதியான பிரெஸ்டனில் உள்ள நார்த்லந்து கடைத்தொகுதியில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மே 25) பிற்பகல் 2.30 மணியளவில் கிட்டத்தட்ட பத்துப் பேர் இரண்டு குழுக்களாகப் பொருதியதாக அதிகாரிகளில் கூறினர். அவர்களில் சிலர், கத்திகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ராயல் மெல்பர்ன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இரண்டு ஆடவர்களைக் கைது செய்தனர்.
மோதல் நடந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் பயத்தில் சம்பவ இடத்திலிருந்து ஓட்டம் பிடித்ததை இணையக் காணொளிகள் காட்டுகின்றன.

