லண்டன்: இங்கிலாந்தில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
கேம்பிரிட்ஜ்ஷியர் பகுதியில் ஹண்டிங்டனுக்குச் சென்ற ரயிலில் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
உடனடியாக, அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) அதிகாலை 2.25 மணிக்கு நடந்த அச்சம்பவம் குறித்து அன்றைய தினம் 3.35 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
அதில், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பிபிசி கூறியது.
ஆடவர் ஒருவர் பெரிய கத்தியுடன் வலம் வருவதைப் பார்த்ததாகவும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கழிவறைக்குள் மறைந்துகொண்டதாகவும் அச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ‘தி டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.
மேலும், அனைத்து இடங்களும் ரத்தம் தோய்ந்து இருந்தன என அவர் சம்பவத்தை விவரித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அப்பகுதியில் இருப்போர் தயவுசெய்து காவல்துறையின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்,” எனப் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் தமது எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து இங்கிலாந்து போக்குவரத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக ‘தி கார்டியன்’ தெரிவித்தது.
தாக்குதலுக்கான காரணம் குறித்த எந்த விவரத்தையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

