போலந்தில் கத்திக்குத்துச் சம்பவங்கள்; பள்ளிகளில் பாதுகாப்பு தீவிரம்

போலந்தில் கத்திக்குத்துச் சம்பவங்கள்; பள்ளிகளில் பாதுகாப்பு தீவிரம்

படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 7:51 pm

2 mins read

வார்சா: போலந்தில் உள்ள பள்ளிகளில் நடந்த தொடர் கத்திக்குத்துச் சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நாடு முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பள்ளிகளில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளையர்களிடையே அதிகரித்து வரும் வன்முறைப் போக்கை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் டோனல்ட் டஸ்க் சூளுரைத்துள்ளார்.

அண்மையில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த போலந்து அரசாங்கம், உடனடியாக இந்த அவசரப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் இணையத்தின் வாயிலாகப் பரவும் ஏதேனும் சவால் விளையாட்டுடனோ அல்லது ஏதேனும் திட்டமிடப்பட்ட கும்பலுடனோ தொடர்புடையவை என்ற வதந்திகளைப் போலந்து அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இருப்பினும், இணையத்தின் சில முடுக்குகளில் வன்முறை போற்றப்படுவதும் அது இளையர்கள் மத்தியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதும் கவலைக்குரிய விஷயம் என ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 11) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பிரதமர் டஸ்க் சுட்டிக்காட்டினார்.

போலந்திலும் உலகளவிலும் வன்முறை மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதைக் காண்பதாகவும் இது ஒரு கொடூரமான போக்காகும் என்றும் பிரதமர் டஸ்க் குறிப்பிட்டார்.

போலந்து மீதான தாக்குதலையும் பொது ஒழுங்கு சீர்குலைக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தி சமூகத்துக்குச் சென்றடைய வேண்டும் என்று போலந்தின் உள்துறை அமைச்சர் மார்சின் கீர்வின்கி திட்டவட்டமாகக் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, காவல்துறையினர் அக்டோபர் 9ஆம் தேதி முதல் இதுவரை ஏறத்தாழ 80,000 கல்விக் கழகங்களை ஆய்வு செய்து, 135 பேரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
போலந்துபள்ளிகத்திக்குத்துபாதுகாப்பு