கோத்தா திங்கி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் காவலில் சந்தேக நபர்

கோத்தா திங்கி துப்பாக்கிச்சூடு: விசாரணைக் காவலில் சந்தேக நபர்

1 mins read
ac058d1c-f2e6-4684-b8f3-44036ccf62da
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன. - படம்: தி ஸ்டார்/எக்ஸ்

கோத்தா திங்கி: கோத்தா திங்கியில் உள்ள தாமான் கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச்சூடு நடத்தி மூவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 71 வயது ஆடவர் ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஏப்ரல் 26ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க, கோத்தா திங்கி நீதிமன்ற நீதிபதி நூர்கலிதா ஃபர்ஹானா அபுபக்கர் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) உத்தரவிட்டார். குற்றவியல் தண்டனைச் சட்டம், 302வது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்துக்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமை காலை 9 மணியளவில், விலங்கிடப்பட்ட நிலையில் கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைமையக அதிகாரிகளால் அந்த ஆடவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள உணவகம் ஒன்றில் உள்ளூர் ஆடவர்கள் இருவரும் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் சுடப்பட்டுக் கிடந்ததாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் 37 முதல் 63 வயதுக்கு உட்பட்டவர்கள்.

சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர்களைச் சுடுவதற்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

குறிப்புச் சொற்கள்