பாசிர் கூடாங், ஜோகூர்: மலேசியாவின் அரசாங்க ரயில்வே நிறுவனமான கிரேத்தாப்பி தானா மலாயு (கேடிஎம்), பயணிகளுக்கான புதிய சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
கூடிய விரைவில் கட்டிமுடிக்கப்படவிருக்கும் ஆர்டிஎஸ் எனும் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் கட்டமைப்பை அடுத்து வரக்கூடிய பெரும் திரளான பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க கேடிஎம் நிறுவனம் பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவதாகச் சொன்னது.
ஆர்டிஎஸ் ரயில் சேவை 2026ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கேடிஎம் நிறுவனம், கெம்பாஸ் பாருவிலிருந்து பாசிர் கூடாங்கிற்குச் சேவை வழங்கும் அதன் 40 கிலோமீட்டர் ரயில் பாதையை விரிவுபடுத்தவிருப்பதாகக் கூறியது.
சரக்குகளை மட்டும் தற்போது ஏற்றிச்செல்லும் ரயில் சேவை 2026ஆம் ஆண்டுக்குள் பயணிகளுக்கும் சேவை வழங்கும். அதை முன்னிட்டு பயணிகளுக்கென இரண்டு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
எல்லை தாண்டிய ஆர்டிஎஸ் திட்டம் நிறைவடையும்போது ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 10,000 பயணிகள் வரை சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்துக்கும் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் ரயில் நிலையத்துக்கும் இடையில் பயணம் செய்ய முடியும். எனவே குறிப்பிட்ட அந்த வட்டாரத்தில் கூட்டம் அதிகமாகும்.
இதற்குமுன் புக்கிட் சாகார் வட்டாரத்தில் ஏற்படக்கூடிய கூட்டத்தைச் சமாளிக்க ஏஆர்டி எனும் ஓட்டுநரில்லா டிராம் வண்டிகள் அறிமுகம் காணும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மாறாக பயணிகளுக்கான கேடிஎம் ரயில் சேவை நிலைமையைக் கட்டுப்படுத்த கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக சரக்குகளை மட்டும் கொண்டுசெல்ல பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் தண்டவாளத்தை ஒட்டிய கெம்பாஸ் பாருவிலும் பாசிர் கூடாங்கிலும் பயணிகளுக்கென இரண்டு நிலையங்கள் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாம் கட்டத்தில் பயணிகளுக்கென கூடுதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஜோகூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படுவதால் 2030ஆம் ஆண்டுக்குள் அங்கு வேலை செய்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300,000ஆக அதிகரிக்கும் என்று பாசிர் கூடாங் நகர மன்றம் மதிப்பிடுகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி அங்கு 260,000 பேர் வேலை செய்தனர்.
ஜோகூர் பாருவில் ஏற்படக்கூடிய பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க இதர திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.