பெட்டாலிங் ஜெயா: அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான ‘கிப்பன்’ குரங்குகளைச் சட்டவிரோதமாகக் கடத்துவதற்கான முக்கிய இடமாக கோலாம்பூர் அனைத்துலக விமான நிலையம் செயல்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வனவிலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் சட்டவிரோத, கட்டுப்பாடற்ற வர்த்தகத்தைக் கண்காணிக்கும் ‘டிராஃபிக்’ என்ற அனைத்துலக அமைப்பின் தென்கிழக்காசியப் பிரிவு தனது அறிக்கையில் அத்தகவலைக் குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரிக்கும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தென்கிழக்காசிய வட்டாரத்துடன் தொடர்புடைய 33 அனைத்துலக வனவிலங்குக் கடத்தல் சம்பவங்களில் குறைந்தது 86 ‘கிப்பன்’ குரங்குகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
அவற்றில், குறைந்தது 16 சம்பவங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்துடன் தொடர்புடையவை. அச்சம்பவங்களில் 54 கிப்பன் குரங்குகள் மீட்கப்பட்டன.
அவை பயணப் பெட்டிகளுக்குள் சிறிய விலங்குக் கூண்டுகளிலோ, நெகிழிக் கூடைகளிலோ அடைத்து வைக்கப்பட்டுக் கடத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
உலக ‘கிப்பன்’ தினத்தை (அக்டோபர் 24) முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கைப்பற்றப்பட்ட கிப்பன் குரங்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் சிக்கின.
கடத்தப்பட்ட கிப்பன்களில் சியாமங் (Siamang), ஏஜைல் (Agile) வகைகளே அதிகம்.
2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் நடந்த அரிய வகை வனவிலங்குள் கடத்தலில் தொடர்புடைய இந்தியர், மலேசியர், சிங்கப்பூரர், எகிப்தியர் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணக் கட்டணம், இலவச விமானச் சீட்டுகள், தங்குமிடம் ஆகியவற்றைத் தருவதாகக் கூறிப் பலரைக் கடத்தல்காரர்களாக வனவிலங்குக் கடத்தலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
அரிய வகைக் குரங்குகளின் கடத்தலைத் தடுக்க, விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் தங்களது சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என ‘டிராஃபிக்’ அமைப்பின் தென்கிழக்காசியப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
