புத்ராஜெயா: 2026ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் தீபாவளி அங்காடியின் பங்கேற்புக் கட்டணம் 85 விழுக்காடு குறைக்கப்பட்டு, அதிகபட்சமாக 400 மலேசிய ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் வைப்புத் தொகை உட்பட சேவைக் கட்டணம், வாடகை, உரிமக் கட்டணம் ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நடந்த தீபாவளி அங்காடியில் கலந்துகொள்வதற்காக வியாபாரிகள் 2,626 ரிங்கிட் செலுத்தினர்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான 400 ரிங்கிட் கட்டணத்தில் 30 ரிங்கிட் உரிமக் கட்டணம், 150 ரிங்கிட் சேவைக் கட்டணம், 150 ரிங்கிட் இட வாடகை, 70 ரிங்கிட் வைப்புத் தொகை ஆகியவை அடங்கும்.
வியாபாரிகளின் செலவைக் குறைத்து, அவர்கள் வர்த்தகம் செய்வதற்கான கால அளவை 21 நாள்களிலிருந்து 30 நாள்களாக நீட்டிப்பதே முதன்மை நோக்கம் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசம்) ஹன்னா யோ திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், இடைத்தரகர்கள் ஆயிரக்கணக்கான ரிங்கிட் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, விருப்பமுள்ளவர்கள் நேரடியாகக் கோலாலம்பூர் மாநகராட்சியிடம் விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டின் தீபாவளி அங்காடி அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை துன் சம்பந்தன் வளாக வாகன நிறுத்துமிடம், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு அருகில் உள்ள ஜாலான் யுனுஸ் 6 ஆகிய இரு இடங்களில் நடைபெறும்.
மாபெரும் தீபாவளி எனும் கருப்பொருளில் அவ்விரு இடங்களிலும் மொத்தம் 172 வியாபாரக் கடைகள் அமைக்கப்படும்.
இவ்வாண்டுக்கான உரிமம், ஒழுங்குமுறை, அமலாக்கம் போன்ற பொறுப்புகளைப் மாநகராட்சி ஏற்கும் எனக் கோலாலம்பூர் நகர மேயர் ஃபட்லுன் மக் உஜுத் கூறினார்.
மேலும், கடைகளுக்கான குலுக்கல் செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனக் கூறிய அவர், அங்காடி நடைபெறும் காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, முறையான போக்குவரத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
