கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம், 50 மீட்டர் தூரத்திலுள்ள இடத்திற்கு மாறிச் செல்ல இணங்கியுள்ளது.
கோலாலாம்பூர் மாநகர மன்றத்துடனான (DBKL) கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தைகளின் பலனாக அந்த முடிவு எட்டப்பட்டதாக ஆலயத்தின் செயலாளர் கார்த்திக் குணசீலன் தெரிவித்துள்ளதாக த ஸ்டார் இணையச் செய்தி கூறியது.
மாறிச் செல்ல உள்ள புதிய இடம் மஸ்ஜித் இந்தியா சாலைக்கு உட்பட்ட பகுதியிலேயே மாறிச் செல்வதால் அந்த இடம் ஆலய இடமாற்றத்திற்குப் பொருத்தமானதாக உள்ளது என்றார் அவர்.
ஆலய இடமாற்றம் தொடர்பாக சுமூகத் தீர்வு காண உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநகர மன்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்துக்களின் நம்பிக்கையை மதிக்கும் வண்ணம் நல்லிணக்க உணர்வோடு அந்தக் கோயில் பொருத்தமான இடத்திற்கு மாற்றப்படும் என முன்னதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
ஆலயம் இருந்த இடத்தில் புதிய பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு வியாழக்கிழமை (மார்ச் 27) நிகழ உள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஸ்ஜித் இந்தியாவில் தற்போது உள்ள பள்ளிவாசல்களில் இட நெருக்கடி இருப்பதால் அந்த வட்டாரத்தில் புதிய பள்ளிவாசலைக் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திரு அன்வார் இதற்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
இருப்பினும், ஆலயத்தை இடமாற்றுவது தொடர்பாகக் கடந்த ஒரு வார காலமாக சர்ச்சை நிலவி வந்தது. 2022 நவம்பர் பொதுத் தேர்தலில் திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிக்காத பெரும்பாலான மலாய் வாக்காளர்களைக் கவர ஆலய இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்ப்பு விமர்சனங்களும் எழுந்தன.
தொடர்புடைய செய்திகள்
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோலாலம்பூர் மாநகர மன்றம், ஆலய நிர்வாகம், ஆலயம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரான ஜேக்கல் (Jakel) குழுமம் ஆகியவற்றுக்கு இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு காணப்பட்டது.
ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருடன் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்தை நடத்தி வருவதாக ஜேக்கல் குழுமம் கூறியது.
ஆலயம் அமைந்துள்ள ஏறத்தாழ 12,000 சதுர அடி பரப்பளவு உள்ள நிலப் பகுதி கோலாலம்பூர் நகர மன்றத்தின்வசம் இருந்தது. அந்த நிலப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு ஜேக்கல் குழுமத்திற்குக் கைமாறியது.