கோலாலம்பூர்: கோலாலம்பூரைச் சேர்ந்த கோலக் கலைஞர் ஒருவர் தீபாவளியை முன்னிட்டு கண்ணைக் கவரும் பல வண்ணக் கோலங்களால் வீடுகளையும் கடைத்தொகுதிகளையும் அலங்கரித்து வருகிறார்.
ரூபன் பிரகாஷ், 38, எனும் அவர், கோலாலம்பூரின் பாந்தாய் டலாமில் உள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் பெரிய கோலம் ஒன்றை தீட்டிக்கொண்டு இருந்தபோது செய்தியாளரிடம் பேசினார்.
“இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் வீடுகள், கோயில்கள் மற்றும் கடைத்தொகுதிகளில் 50 வண்ணக் கோலங்களைத் தீட்டி அழகுபடுத்தி உள்ளேன்.
“தீபாவளித் திருநாளான அக்டோபர் 31க்குள் இன்னும் 50 கோலங்களை முடிக்கத் திட்டமிட்டு உள்ளேன்.
“தீபாவளியன்று எனது வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டில் காலை 6 மணி முதல் கோல அலங்காரத்தைச் செய்ய உள்ளேன்.
“வழக்கமாக, நான்கு சதுர அடி தரையில் அழகிய கோலத்தைத் தீட்ட 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை எடுத்துக்கொள்வேன்.
“பல வண்ணங்களுடன் அழகழகாகக் கோலத்தை மிகவும் நேர்த்தியாகத் தீட்டுவது என்பது கடினமான செயல்தான்.
“இருப்பினும், கோலமிட்டு முடித்த பின்னர் வீட்டுக்கு அது அழகு சேர்ப்பதைக் காணும்போது பெருமையாக இருக்கும்,” என்றார் திரு ரூபன்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஏராளமான கோலங்களை அவர் தீட்டி வருவதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்தது.
பெரும்பாலும் தாமரை, மயில், இந்திய இசைக்கருவிகளான தபேலா, வீணை மற்றும் பரதநாட்டியம், கதகளி போன்றவற்றை தமது கோலங்களில் அவர் இடம்பெறச் செய்து வருகிறார்.
அவர் இதுவரை வரைந்தவற்றில் ஆகப்பெரிய கோலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்-2ன் நுழைவாயிலில் அமைந்துள்ளது. அந்தக் கோலத்தின் அளவு 73.1 மீட்டர்.

