கோலாலம்பூர்: கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசிய அரசாங்கம் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத் தொடக்கத்திற்குள் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் இதைத் தெரிவித்தார்.
இருப்பினும், வெளியிடப்படவிருக்கும் பரிந்துரைகள் அடங்கிய கொள்கை அறிக்கை அத்திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான இறுதி முடிவு அன்று என்றார் அவர்.
டிசம்பர் அல்லது ஜனவரியில் எடுக்கப்படும் முடிவு, அத்திட்டம் தொடர்பான வருங்காலக் கலந்துரையாடல்கள் எத்திசையில் செல்லும் என்பதை நிர்ணயிக்கும் என்றார் அமைச்சர்.
அமைச்சரவையில் ஒப்புதலை அதிவேக ரயில் திட்டத்துக்கான இறுதி முடிவு எனக் கருதமுடியாது என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
இது இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நிகழ்த்திய பிறகே இதன் தொடர்பில் முன்னேற்றம் காண முடியும் என்றார் திரு லோக்.
அதிவேக ரயில் திட்டம் நடப்புக்கு வந்தால், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயண நேரம் 90 நிமிடங்களாக இருக்கும்.
மலேசியாவும் சிங்கப்பூரும் அத்திட்டம் குறித்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் இணக்கம் கண்டன. அதன்படி 2026ஆம் ஆண்டுக்குள் அதிவேக ரயில் திட்டம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
350 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதை, கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும்.
இருப்பினும், 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் 2021ல் அதிகாரபூர்வமாக கைவிடப்பட்டது. அதையடுத்து மலேசியா சிங்கப்பூருக்கு 340.6 மில்லியன் ரிங்கிட் (S$102.8 மில்லியன்) இழப்பீடு தர நேரிட்டது.
செலவு குறையுமானால் அதிவேக ரயில் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்துத் தமது அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார். அதேபோல் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் சிங்கப்பூர் அத்திட்டம் தொடர்பான புதிய பரிந்துரைகளைப் பரிசீலிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.