பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட்டில் இருக்கும் பிரபலமான உல்லாசத்தலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர் அடங்குவர் என அந்நாட்டு உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆகஸ்ட் 23ஆம் தேதி அதிகாலை 2 மணிக்குப் (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணி) பெய்யத் தொடங்கிய கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதமடைந்தன,” என்றார் அவர்.
மேலும், ஹோட்டல்கள் மற்றும் வாடகைக் குடியிருப்புகள் அமைந்துள்ள தீவின் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தலைவர் கூறினார்.
மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள், தொண்டூழியக் குழுக்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இடையூறு ஏற்படலாம் எனவும் அவர் சொன்னார்.

