பெய்ஜிங்: சீனாவின் மேற்கு மாநிலமான கான்சுவின் மலைப்பாங்கான மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் மண்ணில் புதையுண்டதாக அந்நாட்டின் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் மொத்தம் 33 பேர் சிக்கியிருந்த வேளையில், அவர்களில் 17 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர் என்று சிசிடிவி கூறியது.
தான்சாங் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் உள்ளூர் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. எனினும், நிலச்சரிவுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
செங்குத்தான பள்ளத்தாக்குகளையும் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் ஆறுகளையும் கொண்ட இந்த மலைப்பகுதி, குறிப்பாக, மழைக்காலத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.
இதற்கிடையே, சீனாவில் வீசிய சூறாவளி காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, நானிங் நகரில் உள்ள நீர்த்தேக்கத்தின் சுவர் உடைந்து அதிகமான வெள்ளநீர் வெளியேறியது.
‘மேசாக்’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குறைந்தபட்சம் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். அத்துடன், நானிங் முழுவதுமிருந்தும் மேலும் 62,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அவசரகால வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கை உச்சநிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சீனா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அதிபர் ஸி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வரும் நாள்களிலும் கனமழை தொடரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

