தங்கத்தை ரொக்கமாக மாற்ற சீனாவில் பெருங்கூட்டம்

தங்கத்தை ரொக்கமாக மாற்ற சீனாவில் பெருங்கூட்டம்

2 mins read
8ffeaa2d-0e79-4a2f-a9a0-072800b32e01
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் உள்ள தங்கத்திற்குப் பணம் தரும் இயந்திரத்தின் முன்பு பலரும் திரண்டனர். - படம்: ஏஎஃப்பி

ஷாங்காய்: தங்கம் விலை உச்சத்தில் இருந்தபோது சீனாவில் அதனை விற்க தானியங்கி இயந்திரங்களின் முன்னால் பெருங்கூட்டம் காணப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனப் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை இயந்திரத்தின் வழியே செலுத்தி ரொக்கப் பணம் பெறுவதற்காக ஷாங்காய் நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியின் முன்பு வரிசை பிடித்து நின்றிருந்தனர்.

தமது நகையை இயந்திரத்திற்குள் செலுத்த ஒரு மணி நேரம் வரை காத்திருக்க நேர்ந்ததாக ஒருவர் அச்செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஜனவரி 29ஆம் தேதி உலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை 5,600 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது.

அந்த உயர்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஏராளமானோர், அந்தக் கடைதொகுதியில் ‘கிங்ஹூட் குரூப்’ என்னும் தங்கம் வர்த்தக நிறுவனத்தின் தானியங்கி இயந்திரம் முன்னால் திரண்டனர்.

அவர்களில் ஒருவரான வூ என்னும் பெயருடைய 54 வயதுப் பெண், 2002ஆம் ஆண்டு தமது மகள் பிறந்தபோது வாங்கிய தங்கக் காசுகளை ரொக்கமாக மாற்ற அங்கு நின்றிருந்தார்.

“இந்த அளவுக்கு வியத்தகு அளவில் தங்கம் விலை ஏறும் என ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று அவர் ஏஎஃபி செய்தியிடம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், மறைந்த தமது தந்தையின் மோதிரத்தை அந்த இயந்திரம் வழி மாற்றி 10,000 யுவான் (S$1,827) ரொக்கம் பெற்றதாக அந்தப் பெண் கூறினார்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் அந்தக் காசு 1,000 யுவானுக்கு வாங்கப்பட்டதாகவும் தற்போது அது பத்து மடங்கு உயர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டுவிட்டதாக இதுவே விற்பதற்கான தருணம் என்ற ஒரு விளம்பரம் அந்த தானியங்கி இயந்திரத்தில் ஒட்டப்பட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்