பெய்ஜிங்: சீனாவில் வாகனங்களின் கதவுக் கைப்பிடிகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பான குறைபாடுகள் காரணமாக அதிக அளவில் வாகனங்களைத் திரும்பப்பெறும் புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வரலாற்றில் வாகனங்களைத் திரும்பப்பெறும் நடவடிக்கையில் இதுவே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.
டெஸ்லா, ஷாவ்மி உட்பட 11 கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) மென்பொருள் புதுப்பிப்புகளையும் வாகனங்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளையும் தொடங்கின.
மின்சார வாகனங்களில், அவசரக்காலத்தின்போது கதவுகளைத் திறக்கும் கட்டமைப்புகளைச் சீனா தீவிரமாக ஆய்வு செய்துவரும் நிலையில், அண்மை அறிவிப்பு வந்துள்ளது.
பெரும்பாலான நடவடிக்கைகள், அவசரக்காலங்களில் கதவைத் திறக்கும் இயந்திரக் கைப்பிடிகளைக் கண்டறிவதோ இயக்குவதோ கடினமாக இருக்கக்கூடும் என்ற கவலையைச் சரிசெய்ய முற்படுகின்றன.
சீனாவில் உள்ள 11 கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்பது, கதவுக் கைப்பிடிகளை எளிதில் அடையாளங்காண இலவசமாக எச்சரிக்கை ஒட்டுவில்லைகளைப் பொருத்தப்போவதாகக் கூறியுள்ளன.
அண்மையில் மின்சார வாகனத் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளையும் அது நடைமுறைப்படுத்தியுள்ளது. சீனா, உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தையைக் கொண்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம், அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் சீனாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட 2.98 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறவுள்ளது.


