தோக்கியோ: ஜப்பானிலும் இந்தியாவிலும் புதிதாகத் தொடங்கப்பட்ட விண்வெளி நிறுவனங்கள், லேசர் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதன் தொடர்பில் கூட்டு ஆய்வு செய்ய இணங்கியுள்ளன.
விண்வெளியில் கைவிடப்பட்ட பொருள்கள் குறித்த பிரச்சினை அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
தோக்கியோவைச் சேர்ந்த ‘ஆர்பிட்டல் லேசர்ஸ்’ நிறுவனமும் இந்தியாவின் எந்திரனியல் நிறுவனமான ‘இன்ஸ்பெசிட்டி’யும் விண்வெளியில் செயலிழந்த செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து அகற்றுதல், விண்கலத்தின் ஆயுளை நீட்டித்தல் போன்ற சேவைகளை வழங்குவது தொடர்பான வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கின்றன.
லேசர் ஒளிக்கற்றை ஆற்றலைப் பயன்படுத்தி விண்வெளிக் குப்பை மேற்பரப்பின் சிறு பகுதியை ஆவியாக்குவதற்கான கட்டமைப்பை ‘ஆர்பிட்டல் லேசர்ஸ்’ நிறுவனம் உருவாக்கி வருகிறது. சேவை வழங்கும் விண்கலம் விண்வெளிக் குப்பையை நெருங்கிச் செல்ல இது வழிவகுக்கும்.
இந்தியாவிலும் ஜப்பானிலும் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்தால், 2027ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் கட்டமைப்பை ‘இன்ஸ்பெசிட்டி’ செயற்கைக்கோள்களில் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையும் விண்வெளிக் குப்பையின் அளவும் வெகுவாக அதிகரிக்கும் நிலையில், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் உள்ள பொருள்களைக் கண்காணிக்க அவசர நடவடிக்கை அவசியம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விண்வெளிப் போக்குவரத்து ஒத்துழைப்புக் குழு அக்டோபரில் கூறியிருந்தது.

