வாஷிங்டன்: அமெரிக்காவின் எதிரெதிர் வரிவிதிப்பு நடப்புக்கு வருவதற்குச் சற்று முன்னர் அதிபர் டோனல்ட் டிரம்ப் அதில் சில திருத்தங்களைச் செய்துள்ளார்.
உலக நாடுகளுக்கான குறைந்தபட்ச வரிவிதிப்பு 10 விழுக்காடு என்று அவர் நிர்ணயித்துள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (ஜூலை 31) இரவு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
குறைந்தபட்ச வரிவிதிப்பை 15 விழுக்காடு வரை உயர்த்தலாம் என இதற்குமுன்னர் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக, நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.
புதிய வரிவிதிப்புக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை டிரம்ப் கெடு விதித்து இருந்தார். வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நாடுகள் ஈடுபடுவதற்கு இரண்டாம் முறை வாய்ப்பு வழங்க அந்தத் தேதி வரை வரிவிதிப்பை நிறுத்துவதாக அவர் குறிப்பிட்டு இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பல்வேறு வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் வரிவிகிதம் அடங்கிய பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது.
அவற்றில் சில எதிர்பார்த்ததைப்போலவே உள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு 25 விழுக்காட்டு வரி என்பது ஏற்கெனவே அறிவித்ததற்கு இணங்க உறுதியாகி உள்ளது.
இருப்பினும், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் கெடு முடிய சற்று நேரம் இருக்கும் வேளையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அந்த இரு நாடுகளுக்கும் 19 விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
வரிவிதிப்புக்கு உட்படும் நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுடன் வர்த்தக உபரிப் பொருள்களைக் கொண்ட நாடுகளுக்கு 10 விழுக்காடு, கணிசமான வர்த்தகப் பற்றாக்குறை நிலவும் பொருள்களை இறக்குமதி செய்யும் அதேநேரத்தில் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்துகொண்ட நாடுகளுக்கு 15 விழுக்காடு என்று முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அதேநேரம், உடன்பாட்டுக்கு முன்வராத நாடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், மியன்மார், லாவோஸ் போன்ற நாடுகளுக்கு 40 விழுக்காட்டு வரி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூருடனான அமெரிக்காவின் வர்த்தகத்தில் உபரி கடந்த ஆண்டு US$2.8 பில்லியன் (S$3.6 பில்லியன்) வர்த்தக உபரி இருந்தது. அதன் காரணமாக, அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.