தோக்கியோ: படிக்கட்டுகள், சமனற்ற தரை, என எத்தகைய இடத்திலும் பயணிக்கக்கூடிய மின்சார சக்கர நாற்காலியை ஜப்பானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
அடுத்தவர் உதவியின்றி பேருந்து, ரயில்களில் ஏறவும் வசதியான அந்த சக்கர நாற்காலியைப் புதிய நிறுவனமான லைஃப்ஹப் இன்காப்பரேட்டட் 2026ல் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தட்டையான மேற்பரப்புகளில் நான்கு சக்கரங்களில் இயங்கும் அந்த சக்கர நாற்காலி, படிக்கட்டுகள், சரிவுகள், சீரற்ற தரைகளில் பயணிக்க வசதியாக உருளும் பற்சக்கரத்தைக் கொண்டுள்ளது.
‘ஏவெஸ்ட்’ எனப் பெயரிப்பட்டுள்ள அந்த சக்கர நாற்காலி, 40 டிகிரி வரை சாய்வான படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது இருக்கையின் கோணத்தை அதற்கேற்ப சரிசெய்யக் கூடியது. ஒருமுறை மின்னூட்டம் செய்யதால் 40 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
லைஃப்ஹப் நிறுவனம், 1.5 மில்லியன் யென் (S$13,800) விலையில் 50 வெளியீட்டு பதிப்புகளை வழங்குகிறது. ஜப்பானில் மின்சார சக்கர நாற்காலிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோவைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம், மற்றவர் உதவியின்றி மின்படிகளில் ஏறி, இறங்கக்கூடிய புதிய மாதிரியை உருவாக்கி வருகிறது. அத்தகைய வசதியைக் கொண்ட உலகின் முதல் சக்கர நாற்காலியாக அது இருக்கும் என்று லைஃப்ஹப் கூறியது.

