பேங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தெருவிலிருந்த நாய்க்குட்டியைக் கொடூரமான முறையில் கடலில் வீசியதாகக் கூறப்படுவதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆடவர் மன்னிப்பு கேட்டபோதும், கண்காணிப்பு அறக்கட்டளை அமைப்பான ‘வாட்ச்டாக் தாய்லாந்து ஃபவுண்டேஷன்’ (WDT) அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
ஆடவரின் செயலுக்கு நீதி கோருவதாக அது குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், ஆடவர் ஒருவர் நாய்க்குட்டியைத் தூக்கி, தன் முழு பலத்துடன் அதைக் கடலில் வீசி எறிவது பதிவாகியுள்ளது.
நாய்க்குட்டியைத் தூய்மையாக்கவே தான் அவ்வாறு செய்ததாக ஆடவர் கூறினார்.
நீந்திக் கரையேற அந்த நாய்க்குட்டி போராடிய நிலையில் ஆடவர் அதைப் பலமுறை கடலில் வீசி எறிந்தார்.
அந்த ஆடவரை அடையாளம் காண விரும்புவதாக ‘டபிள்யூடிடி’ அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அவரது செயல் விலங்குவதை என்றும் அது சாடியது.
அதையடுத்து, காணொளியைப் பதிவிட்ட அந்த ஆடவர் மன்னிப்பு கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நாய்க்குட்டியின் மீது அதிகமான ஒட்டுண்ணிகள் காணப்பட்டதாகவும் அதனால் தான் அவ்வாறு அதைத் தூய்மைப்படுத்தியதாகவும் ஆடவர் தன் செயலை நியாயப்படுத்தினார். மேலும், இணையவாசிகளிடமும் அவர் மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும் அவரை அடையாளம் காண ‘டபிள்யூடிடி’ காவல்துறை உதவியை நாடியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளதாகவும் அது தெரிவித்தது.

