பேங்காக்: தாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிய புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அர்னான் நம்ப்பாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தை அவமதித்த குற்றத்திற்காக 39 வயதான நம்ப்பாவுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களின்போது தாய்லாந்து அரசில் மன்னரின் பங்கு குறித்து வெளிப்படையாகப் பொது மேடையில் விவாதிக்க நம்ப்பா அழைப்பு விடுத்தார்.
தாய்லாந்துச் சட்டத்தின்படி, அரச குடும்பத்தினரை விமர்சிப்பது குற்றமாகும்.
அரச குடும்பத்தினரையோ மன்னராட்சியையோ அவமதிக்கும் வகையில் கருத்துரைப்போருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இத்தகைய தண்டனையை அனைத்துலக மனித உரிமைக் குழுக்கள் பரவலாகக் கண்டித்துள்ளன.

