தலைவரில்லா இளையர் பயங்கரவாதம்: தென்கிழக்காசியாவை அச்சுறுத்தும் புதிய ஆபத்து

தலைவரில்லா இளையர் பயங்கரவாதம்: தென்கிழக்காசியாவை அச்சுறுத்தும் புதிய ஆபத்து

படம்: ஏஎஃப்பி

20 Sep 2026 - 7:06 pm

2 mins read

ஜகார்த்தா: தென்கிழக்காசியாவில் தலைவரோ குறிப்பிட்ட கொள்கையோ இல்லாத புதிய வகை இளையர் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இணையத்தில் வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது, பள்ளித் தாக்குதல்களைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்தோனீசியாவில் 2025 அக்டோபரில், 18 மாநிலங்களைச் சேர்ந்த 70 இளையர்கள் இத்தகைய குழுக்களுடன் இணைக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் துப்பாக்கிகள், கத்திகள் மூலம் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர்.

அவர்களுக்குத் தெளிவான அரசியல் அல்லது சமயத் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை. வன்முறையின் மீதான ஈர்ப்பே அவர்களை இதற்குத் தூண்டியுள்ளது.

சிங்கப்பூரில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான தீவிரவாத அச்சுறுத்தல் அறிக்கையில், ஐஎஸ் பிரசாரம் முதல் தீவிர வன்முறை வரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இளையர்கள் ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிலிப்பீன்சில் கோட்பாடுகளற்ற தீவிர வன்முறை தொடர்பில் 74 வழக்குகள் கையாளப்பட்டு, 15 வயதிற்கும் குறைந்த 30 சிறார் உட்பட 42 பேர் மீட்கப்பட்டனர்.

மலேசியாவில் 2026 பிப்ரவரியில் 16 முதல் 21 வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பிலிப்பீன்சிலும் இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. தாய்லாந்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி, 14 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இணைய விளையாட்டுகள், சமூக ஊடகங்களின் உத்திசார் நெறிமுறைகள் உள்ளிட்டவை இளையர்களைத் தீவிரவாதப் பாதைக்கு எளிதில் அழைத்துச் செல்கின்றன. தெளிவான கொள்கைகள் இல்லாததால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆரம்பகட்டத்திலேயே எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிய பெற்றோர், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இளையர்களிடம் மின்னிலக்க விழிப்புணர்வையும் நுண்சிந்தனைத் திறனையும் வளர்ப்பதன் மூலம் தீவிரவாத எண்ணங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும். அத்துடன், சமூகத்தில் அவர்களுக்குச் சரியான அங்கீகாரத்தையும் வழிகாட்டலையும் வழங்குவது அவசியமாகும்.

குறிப்புச் சொற்கள்