பெய்ஜிங்: இந்தியாவும் சீனாவும் இருதரப்பு வளர்ச்சியில் இணைந்து பணியாற்றலாம் என்னும் மிக முக்கியமான கருத்தொற்றுமையை இரு நாட்டுத் தலைவர்களும் எட்டியுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
சீனாவும் இந்தியாவும் ஒன்றின் பலத்தை மற்றொன்று பயன்படுத்திக்கொள்ளவும் ஒன்றையொன்று ஆதரிக்கவும் ஒன்றின் வெற்றிக்கு மற்றொன்று உதவவும் அவற்றின் அடிப்படையில் பொதுவான வளர்ச்சியைத் தொடரவும் முடியும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு ஆண்டுகளில் தனது முதல் இந்தியப் பயத்தை சீன அதிபர் முடித்த மறுநாளில் சீன வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
“இரு தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கியமான, பொதுவான புரிந்துணர்வைச் செயல்படுத்த சீனா, இந்தியாவுடன் இணைந்து செயல்படும்,” என்று அந்த அறிக்கை கூறியது.
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர்1 2) மாலை திரு ஸியும் திரு மோடியும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பின் அடிப்படையில் சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை வெளிவந்துள்ளது.
முன்னதாக, திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், “இந்தியா தனது நிலப்பரப்பில் எந்தவொரு சக்தியும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்தை சீனா பெரிதும் மதிக்கிறது,” என்றார்.
18வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஸி புதுடெல்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் குறிப்பிட்டுப் பேசிய வாங் யி, சீனா-இந்தியா உறவுகள் குறித்த உத்திபூர்வ, நீண்டகால பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகப் பேசியதாகத் தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எட்டிய மிக முக்கியமான கருத்தொற்றுமை என்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்களிடம் திரு வாங் தெரிவித்ததாக பிடிஐ செய்தியறிக்கை கூறுகிறது.
