சாவ் பாலோ: பிரேசிலின் இரு மாநிலங்களில் கடந்த வாரம் முதல் காவல்துறையினர் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளில் குறைந்தது 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோவின் துறைமுக நகரமான குவாருஜாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 14 பேரைச் சுட்டுக்கொன்றனர் என அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.
பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவின் பல்வேறு நகரங்களில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 19 பேரைக் காவல்துறை சுட்டுக்கொன்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துத் துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும் தாக்குதலுக்கு ஆளான பின்னர்தான் தங்களை தற்காத்துக்கொள்ள காவல்துறை திருப்பிச்சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்தக் கொலைகள் பிரேசிலில் செயல்படும் மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாதுகாப்புப் படைகள் அதிகாரவரம்பை மீறும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடந்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காவல்துறை நடவடிக்கைகளில் இதுவரை 32 சந்தேகப் பேர்வழிகள் கைதாகியுள்ளனர் என்றும் 11 ஆயுதங்களும் 20 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

