ரியாத்/மினா: சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்களில் நூற்றுக்கணக்கானோர், கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக ஊடகத் தகவல்களும் வெளியுறவு அமைச்சுகளும் தெரிவித்தன.
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட குறைந்தது 550 பேர் இறந்துவிட்டதாக வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினர். அவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என்று இரண்டு அரபு அரசதந்திரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி கூறியது. அவர்களில் பெரும்பாலானோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் சரிபார்க்க இயலவில்லை.
மெக்காவின் அல் ஹரம் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (ஜூன் 17) வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாக சவூதி அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது.
ஹஜ் யாத்திரையின்போது 35 துனீசியர்கள் இறந்துவிட்டதாக துனீசியச் செய்தி நிறுவனமான துனீஸ் ஆஃப்ரிக் பிரஸ் திங்கட்கிழமை கூறியது.
அவற்றில் பல மரணங்கள், கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். காணாமல்போன உறவினர்களை சவூதி மருத்துவமனைகளில் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.
உயிரிழந்த ஜோர்தானிய யாத்ரிகர்களின் உடல்களை அடக்கம் செய்ய 41 அனுமதிகளைத் தான் வழங்கியதாக ஜோர்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. முன்னதாக, வெப்பத் தாக்கம் காரணமாக குறைந்தது ஆறு ஜோர்தானியர்கள் இறந்ததாக அமைச்சு கூறியிருந்தது.
யாத்திரையின்போது 11 ஈரானியர்கள் இறந்துவிட்டதாகவும் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஈரானிய அரசாங்க செய்தித்தளமான ஐஆர்ஐஎன்என் திங்கட்கிழமை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
செனகலைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
யாத்திரையின்போது 144 இந்தோனீசியர்கள் இறந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு திங்கட்கிழமை வெளியிட்ட தரவு காட்டியது. வெப்பத் தாக்கம் காரணமாக மரணங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்து அத்தரவு குறிப்பிடவில்லை.
இந்நிலையில், வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் அவதியுற்ற 2,700க்கும் மேற்பட்ட யாத்ரிகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சவூதி சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

