சாவ்பாலோ: பிரேசிலின் தெற்குப் பகுதியில் வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததைத் தொடர்ந்து குறைந்தது எண்மர் உயிரிழந்தனர்.
பலூனில் பயணம் செய்துகொண்டிருந்தோரில் 13 பேர் உயிர் பிழைத்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலோர நகரமான பிரேயா கிராண்டேயில் அந்த பலூன் தீப்பிடித்து எரிந்ததை வழிப்போக்கர்கள் எடுத்த காணொளிகள் காட்டின.
பயணிகளைச் சுமந்துகொண்ருந்த பெரும் கூடை தீப்பிடித்த வண்ணம் உயரத்திலிருந்து விழுந்ததையும் காணொளிகள் காண்பிக்கின்றன.
விபத்தில் உயிர் பிழைத்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பயணிகளில் நால்வர் தீக்காயங்களால் மாண்டதாகவும் மற்ற நால்வர் கூடையிலிருந்து கீழே குதித்ததில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தின் காரணத்தை உறுதி செய்ய விசாரணை தொடங்கியது. சம்பவம் நடந்த நேரத்தில் வானிலை தெளிவாக இருந்தது
பிரேசிலில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக வெப்பக் காற்று பலூன் விபத்தால் மரணம் நேர்ந்தது. தென்கிழக்கு சாவ் பாவ்லோ மாநிலத்தில் வெப்பக் காற்று பலூன் சவாரி ஒன்றின்போது ஒரு பெண் உயிரிழந்தார்.

