லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகி அழிந்தன.
பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறுமாறு 100,000க்கும் மேற்பட்டோருக்கு உத்தரவிடப்பட்டது.
தீயணைப்புப் பணிகளுக்காக லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புப் பிரிவு அதன் இருப்பில் உள்ள வளங்கள், நீர் அனைத்தையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தீயணைப்புப் பணிகளுக்குப் பலத்த காற்று இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 7ஆம் தேதியன்று தொடங்கிய காட்டுத்தீ இதுவரை தடையின்றி கொழுந்துவிட்டு எரிவதாக அதிகாரிகள் கூறினர்.
நீர்ப் பற்றாக்குறை காரணமாக தீயணைப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பசிபிக் பலிசேட்ஸ் எனும் கடலோரக் குடியிருப்புப் பகுதியில் ஏறத்தாழ 12,000 ஏக்கர் நிலம் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்த நிலைக்கு கலிஃபோர்னியாவின் நீர்வளம் தொடர்பாக அம்மாநில ஆளுநரின் கொள்கைகள், அவர் எடுத்த முடிவுகள்தான் காரணம் என்று அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.
அருகிவரும் மீன்வகையைப் பாதுகாக்கும் நோக்கில் தென்கலிஃபோர்னியாவுக்கு ஆற்று நீர் செல்வதை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கெவின் நியூசம் தடுத்ததால் காட்டுத் தீயை அணைக்கத் தேவையான நீர் இல்லை என்றார் டிரம்ப்.
கலிஃபோர்னிய மக்களைப் பற்றி திரு நியூசம் கவலைப்படவில்லை என்றும் ஆளுநராக இருக்கும் தகுதி அவருக்கு இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.