தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெடுஞ்சாலை உத்தரம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் உயிரிழப்பு

2 mins read
5fb6f39e-7559-4751-8819-afd5d2c897a4
லாட் கிராபாங் டோல்வே கட்டுமானத்தில் பெரிய இரும்புத் தளம் சரிந்து விழுந்தது. - படம்: டுவிட்டர்

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வாகனங்கள் அதிகம் செல்லும் நெடுஞ்சாலையின்மீது பெரிய இரும்பு உத்தரம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் மாண்டனர்.

இணையத்தில் அது குறித்த காணொளிகள் வேகமாகப் பரவி வருகின்றன.

பேங்காக்கின் கிழக்குப் பகுதியில் அந்தச் சாலையில் ‘லாட் கிராபாங்’ சுங்கச்சாவடி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று உத்தரம் இடிந்து விழுந்தது என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேங்காக்கின் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகளைக் கட்டுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி அது.

நாட்டின் பேரிடர் தடுப்பு, மீட்புத் துறை பகிர்ந்த காணொளி ஒன்றில், நெடுஞ்சாலையில் நிறைவுபெறாத சில பகுதிகளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய இரும்பு உத்தரம் ஆட்டங்கண்டு தரையில் விழுந்ததைக் காணமுடிந்தது.

குறைந்தது இருவர் மாண்டுபோனதாகவும் பன்னிரண்டு பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுண்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.

காணாமல்போனவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். காயமடைந்தோரில் நால்வர் மோசமான நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தேடல் பணிகள் கவனமாகத் தொடங்கப்படும் என்றும் திரு சட்சார்ட் கூறினார்.

தாய்லாந்தில் விபத்துகள் பொதுவாக நேர்வதுண்டு. 2016ஆம் ஆண்டில் நடந்த கட்டுமானப் பணிகளில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 13 பேர் மாண்டனர்.

தாய்லாந்து கட்டுமானத் தளங்களின் தொடர்பில் பாதுகாப்புத் தரங்கள் குறித்தும் குறைவான சம்பளங்கள் பற்றியும் தொழிலாளர் குழுக்கள் நீண்டகாலமாகவே எச்சரித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்