சான் டியேகோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் சிறிய படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது மூவர் மாண்டனர்.
ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு வடக்குத் திசையில், கிட்டத்தட்ட 48 கிலோமீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது கடல் கொந்தளிப்பாக இருந்தது.
அலைகளின் உயரம் 2 மீட்டர் வரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடலில் விழுந்தோரைத் தேட அவசரகாலப் படகும் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படுகின்றன.
படகில் இருந்தோரில் சிலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
சில இந்தியக் கடப்பிதழ்கள் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியேகோ நகரின் வடக்குப் பகுதிக்குள் சட்டவிரோத குடியேறிகளைக் கடத்த முற்பட்டபோது படகு கவிழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடலில் விழுந்த நால்வர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் குடியேறிகளை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயன்றவர்கள் என நம்பப்படுகிறது.
இத்தகவலை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெளியிட்டது.

