ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் அமிருதீன் ஷாரி தெரிவித்துள்ளார்.
சமூக ஒற்றுமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
விதிமுறைகளை மீறி வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அறிவிப்பு, மாநிலத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் திரு அமிருதீன் கூறினார்.
‘லிமாஸ்’ எனப்படும் ‘சிலாங்கூர் ஐந்து சமய வழிபாட்டுத் தலங்கள் குழு’ மூலம் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
“கடந்த 15 ஆண்டுகளில், தகுந்த இடங்களில் சட்டபூர்வமாக வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதுடன், விதிகளை மீறி கட்டப்பட்ட சில வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டுள்ளன.
“நில உரிமை, நில பயன்பாடு மற்றும் சுற்றுப்புற விளைவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று திரு அமிருதீன் கூறினார்.

