மலாக்கா: ஆக்ஸ்ட் மாதம் நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலர் மரணமடைந்ததோடு, மேலும் பலரைக் காணவில்லை.
அவ்வாறு அங்கு காணாமல் போனோரில் 54 மலேசியர்களும் அடங்குவர். இதுவரையில் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில் அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை விரைவாக வழங்கும்படி மலேசியா நேப்பாளத்தைக் கேட்டுக்கொண்டது.
நேப்பாளத்தின் தற்போதைய சட்டப்படி, பேரிடரில் காணாமற்போகும் ஒருவரின் மரணச் சான்றிதழ் அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போன மூன்று ஆண்டுகளுக்குப் பின்புதான் வழங்கப்படும்.
கடந்த வாரம் அங்குள்ள தூதரக அதிகாரிகள் தமது அலுவலகத்தில் தம்மைச் சந்தித்தபோது அதுகுறித்துத் தகவல் வழங்கப்பட்டதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் தெரிவித்தார்.
இருப்பினும் நேப்பாளத்தில் மரண சான்றிதழ் வழங்குவது குறித்த சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
அது அங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், மாற்று ஏற்பாடாக காலதாமதமின்றி 54 மலேசியர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என நேப்பாள அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிதி, காப்புறுதி உள்ளிட்ட காரணங்களால் மறைந்த மலேசியர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ்கள் அவசியமாகத் தேவைப்படுவதாக அவர் கூறினார். சனிக்கிழமை (அக்டோபர் 18) நடந்த தேசிய ஒருமைப்பாட்டு மன்றத்தின் 10ஆம் தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இதனை அமைச்சர் தெரிவித்தார்.
