பேங்காக்: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையிலிருந்து நாட்டின் பொருளியலைப் பாதுகாக்க 400 பில்லியன் பாட் (S$15.6 பி.) கடன் வாங்கும் தாய்லாந்து அரசாங்கத்தின் திட்டத்திற்குப் புதிய சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.
சிரமப்படும் குடும்பங்களுக்கு உதவவும் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசாங்கத்திற்கு இருக்கும் அவசரகால அதிகார வரம்பை இச்சட்டச் சோதனை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் நிர்வாகம் பிறப்பித்த இந்தக் கடன் அரசாணை, அவசரகால நடவடிக்கையின்கீழ் வருமா என்பதை தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் தற்போது மறுஆய்வு செய்து வருகிறது. கடந்த மே மாதம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஜூலை 16ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பு, இந்த ஆலோசிக்கப்படும் கடனின் எதிர்காலத்தை மட்டுமன்றி, தாய்லாந்துப் பொருளியலில் வளர்ச்சி குறைந்து நிதி நெருக்கடி நிலவும் வேளையில் அரசாங்கம் வழங்கவிருக்கும் நிதியுதவியின் வேகத்தையும் தீர்மானிக்கும்.
அனுட்டின் அரசாங்கம் தனது நாலாண்டுப் பதவிக்காலத்தின் முதல் சில மாதங்களிலேயே பொதுமக்களின் அதிருப்தியைச் சந்தித்து வருகிறது. ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, தாய்லாந்தின் விவசாயக் கடன் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் இந்த அரசாணைக்குத் தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிதி சமமாகப் பிரிக்கப்பட்டு, அதில் 176 பில்லியன் பாட் பயனீட்டாளர் மானியத் திட்டம் போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்கும் எஞ்சிய நிதி தூய்மையான எரிசக்தியை நோக்கிய நீண்டகால மாற்றத்திற்கும் பயன்படுத்தப்படவிருந்தது.
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதன்மை எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் தலைவர் நத்தபோங் ருவங்பான்யவுத், கடந்த மே மாதம் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். தாங்கள் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் அதை நடைமுறைப்படுத்த அவசரகால அரசாணையைப் பயன்படுத்துவதை எதிர்ப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், தாய்லாந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியை பெரிதும் நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர் ஏக்நிதி நிதிதன்பிரபாஸ், நாட்டின் எரிசக்தி மாற்றத்திற்கு இந்தக் கடன் அரசாணை மிகவும் இன்றியமையாதது என்று கடந்த வாரம் சொல்லியிருந்தார்.

