தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரிவிலக்கு

2 mins read
3510f5f8-53ba-4d9e-9352-61820ffb3d44
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப்படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் எல்லா தனியார் கல்வி நிலையங்களுக்கும் ஓராண்டு காலத்துக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நடப்புக்கு வரும். தனியார் கல்வி நிலையங்கள் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சனிக்கிழமை (ஜூன் 14) இச்செய்தியை வெளியிட்டது.

“அந்தக் கல்வி நிலையங்கள் தங்கள் ஆற்றலையும் கற்பித்தல் வளங்களையும் மேம்படுத்த வகைசெய்வது நோக்கம்.

“நமது சிறார் ஆகச் சிறந்த பயிற்சி பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம். அதுதான் வெற்றிக்கு முக்கியம்,” என்று திரு அன்வார் ‘தேசிய பயிற்சி வாரம் 2025’ எனும் இயக்கத்தின் தொடக்க விழாவில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சி தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்றது.

பாலர் பள்ளிகள், தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் (vocational colleges), உயர்கல்வி நிலையங்கள் ஆகிய அனைத்துக்கும் இந்த வரிவிலக்கு பொருந்தும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார். கல்வி, பயிற்சி நிலையங்களிடமிருந்து கருத்து சேகரித்த பிறகே வரிவிலக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

செயல்முறைகள் தொடர்பில் தாங்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்குமாறு பல கல்வி நிலையங்கள், அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

வரிவிலக்கைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களைக் கண்காணித்து அவை வழங்கும் சேவையின் தரம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு திரு அன்வார், கல்வி, மனிதவள அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மலேசிய மனிதவள மேம்பாட்டுச் சட்டம் 2001ன்கீழ் நிறுவனங்கள், மனிதவள அமைச்சின்கீழ் செயல்படும் மனிதவள மேம்பாட்டு அமைப்பிடம் வரி செலுத்தவேண்டும்.

குறிப்புச் சொற்கள்