கோலாலம்பூர்: கோலாலம்பூர் நகர மண்டபம், புத்ராஜெயா கார்ப்பரேஷன், லாபுவான் ஆகிய இடங்களில் உரிமங்களை வழங்குவதற்கான சீர்தர இயக்கச் செயல்முறை எளிமைப்படுத்தப்படும் என்று மலேசியப் பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பிரதேசம்) அமைச்சர் ஹேன்னா இயோ தெரிவித்தார்.
இதுகுறித்து மறுஆய்வு செய்யப்படுவதாக அவர் கூறினார்.
உரிமங்கள் தொடர்பான செயல்முறை, அன்றாட பரிவர்த்தனைகள் ஆகியவற்றை எளிதாக்கி அனைவரையும் அவை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் இயோ தெரிவித்தார்.
“கோலாலம்பூரில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதில் கடப்பாடு கொண்டுள்ளேன். தனியார் துறையிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கிறேன். அவற்றைக் கொண்டு கூட்டரசுப் பிரதேசத்தை நிர்வகிக்க இலக்கு கொண்டுள்ளேன். செழித்தோங்கும் வர்த்தகங்களும் ஒற்றுமையுடன் செயல்படும் சமூகங்களும் நெருங்கிய தொடர்புடையவை என உறுதியாக நம்புகிறேன்,” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அமைச்சர் இயோ.
கோலாலம்பூர், சிலாங்கூர் வாகனங்கள் மற்றும் கடன் நிறுவனங்களுக்கான சங்கம் அகண்ட வர்த்தகச் சூழலுக்கு ஆக்கபூர்வமாகப் பங்களித்துள்ளதாக அவர் கூறினார்.
சங்கத்தின் 58ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதற்குத் தமது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
எதிர்காலத்தில் சங்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அமைச்சர் இயோ தெரிவித்தார்.

