​சிறார்களுக்கான உயிர்காக்கும் உணவு விரைவில் தீர்ந்துவிடும்

2 mins read
எத்தியோப்பியா, நைஜீரியா சிறார்கள் குறித்து யுனிசெஃப் கவலை
a9617338-4766-4b6e-ad8f-ebc417c558c7
எத்தியோப்பியா, நைஜீரியாவில் உள்ள சிறார்களுக்கு தேவைப்படும் உயிர்காக்கும் உணவு உதவி இன்னும் இரண்டு மாதங்களில் தீர்ந்துவிடும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனிவா: எத்தியோப்பியா, நைஜீரியா நாடுகளில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த சிறார்களுக்கு தேவைப்படும் உணவுப் பொருள்கள் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளதாக யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சிறார்களுக்கான அவசர நிதியம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) தெரிவித்தது.

​இதற்குத் தேவைப்படும் நிதி உதவி கிடைக்காததாலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிநாட்டு நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் விளக்கியது.

​எத்தியோப்பியா, நைஜீரியாவில் உள்ள கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஊட்டச்சத்து குறைந்த சிறார்களுக்கு இந்த உணவு உதவி கிடைக்காமல்போகும் அபாயம் உள்ளதாக யுனிசெஃப் கூறியது.

“​புதிதாக நிதி உதவி கிடைக்கவில்லையானால், ஊட்டச்சத்து குறைந்த சிறார்களுக்கு தேவைப்படும் உணவு கிடைக்காமல் போகும். இதனால், எத்தியோப்பியா, நைஜீரியாவில் உள்ள உணவு தேவைப்படும் 70,000 சிறார்களின் ஊட்டச்சத்து சிகிச்சைக்கு தேவைப்படும் உணவு கிடைக்காமல் போகலாம்,” என்று யுனிசெஃப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் திருவாட்டி கிட்டி வான் டெர் ஹெய்டன் ஜெனிவாவில் செய்தியாளர்களுக்கு காணொளி வாயிலாக வெள்ளிக்கிழமை (மார்ச் 21ஆம் தேதி) தகவல் தெரிவித்தார்.

“​அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுமானால் அது உயிருக்கு ஆபத்தாக முடியலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

​நைஜீரியாவில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த 80,000 சிறார்களுக்குத் தேவைப்படும் உணவு இம்மாத இறுதியில் தீர்ந்துவிடும் என்று அவர் கூறினார்.

​நைஜீரியாவில் அண்மையில் ஒரு பிள்ளை ஊட்டச்சத்து குறைவால் அதன் உடலிலுள்ள தோல் உரிந்து விழுவதை தான் கண்டதாக அவர் மேலும் கூறினார்.

​யுனிசெவ் உட்பட அனைத்துலக அமைப்புகளுக்கு வழங்கப்படும் உதவியை அனைத்துலக நன்கொடையாளர்கள் குறைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிநாடுகளுக்கு வழங்கும் உதவியை 90 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்