பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் விலங்கியல் தோட்ட ஊழியர் ஒருவரைச் சிங்கங்கள் கடித்துக் குதறிக் கொன்றன.
ஆசியாவிலேயே ஆகப் பெரிய திறந்தவெளி விலங்கியல் தோட்டங்களில் ஒன்று என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் சஃபாரி வோர்ல்டு பேங்காக்கிற்குச் சென்ற பொதுமக்கள் அக்கோரச் சம்பவத்தைக் கண்டு நடுநடுங்கினர்.
இச்சம்பவத்தை அடுத்து, அந்த விலங்கியல் தோட்டத்தின் பாதுகாப்பு அம்சம் கேள்விக்குறியாகி உள்ளது.
விலங்கியல் தோட்ட ஊழியரை ஆறு அல்லது ஏழு சிங்கங்கள் ஒன்றிணைந்து கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 10) தகவல் வெளியிட்டனர்.
சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் தீனி போடும் அனுபவத்தை பொதுமக்களுக்கு அந்த விலங்கியல் தோட்டம் தருகிறது. அந்த அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் தலா ஏறத்தாழ 1,200 பாட் (S$48) செலுத்த வேண்டும்.
மாண்ட விலங்கியல் தோட்ட ஊழியர் அந்தச் சிங்கங்களுக்குத் தீனி போடும் பொறுப்பில் இருந்தவர் என்று தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புத் துறையின் வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் திரு சடுடீ புன்புக்டீ தெரிவித்தார்.
அந்த ஊழியர் சிங்கங்கள் இருக்கும் இடத்துக்குள் சென்று அவற்றிடம் தமது முதுகைக் காட்டி தனியாக ஏறத்தாழ மூன்று நிமிடங்களுக்கு நின்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
அப்போது சிங்கம் ஒன்று அவரை நோக்கி மெதுவாக நடந்து அவரைப் பற்றிக்கொண்டது என்றும் அந்த ஆடவர் அலறவில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மாண்டவரின் குடும்பத்தாரிடம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தாய்லாந்து வனவிலங்குப் பிரியர்கள் அறநிறுவனத்தைச் சேர்ந்த திரு என்வின் வியேக் தெரிவித்துக்கொண்டார்.
விலங்கியல் தோட்டத்தில் உள்ள சிங்கங்கள் அனைத்தும் உரிமம் பெறப்பட்டவை என்று விலங்கியல் தோட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அபாயகரமான விலங்குகளைப் பராமரித்து வருவதால் விலங்கியல் தோட்டத்தில் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாண்ட ஊழியர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த விலங்கியல் தோட்டத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியதாகவும் அவர் மிகவும் கணிவன்புடன் நடந்துகொள்பவர் என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார்.