வெகுவிரைவில் மூப்படையும் மக்கள்தொகையைக் கையாள காலம் குறைவு: மலேசிய அமைச்சர்

வெகுவிரைவில் மூப்படையும் மக்கள்தொகையைக் கையாள காலம் குறைவு: மலேசிய அமைச்சர்

கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டுமே உள்ளன என்கிறார் பொருளியல் அமைச்சர்
கோப்புப் படம்: பெர்னாமா

05 Oct 2026 - 4:20 pm

2 mins read

கோலாலம்பூர்: வரும் 2048ஆம் ஆண்டுக்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது

அதற்கு முழுமையாகத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் மட்டுமே உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 2048க்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறுவது, பல வளர்ந்த நாடுகள் அந்தக் கட்டத்தை எட்டும் காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட அளவு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேசிய அளவில் தயாராய் இருப்பதன் தொடர்பில் அரசாங்கத்துக்குக் காலம் குறைவாக இருப்பதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நாசர் கூறியுள்ளார். பிரான்சுக்கு அதற்கான காலம் 115 ஆண்டுகளாகவும் ஆஸ்திரேலியாவுக்கு 73 ஆண்டுகளாகவும் அமெரிக்காவுக்கு 69 ஆண்டுகளாகவும் இருப்பதாக அவர் சுட்டினார்.

மூப்படையும் நாடாக மாற்றம்

மலேசியா 2021ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக மூப்படையும் நாடு என்ற நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏழு விழுக்காட்டினர் 65 வயது அல்லது அதையும் தாண்டியவர்களாக இருந்ததைத் தொடர்ந்து அந்நிலை உருவானது.

“தற்போதைய கணிப்புகளின்படி 2048க்குள் மலேசியா மூப்படைந்த நாடாக மாறும். அப்போது (வயதானவர்களின்) விகிதம் 14 விழுக்காடாக உயரும். பிறகு 2060க்குள் மிக மூப்படைந்த நாடாக மாறும். அப்போது அவ்விகிதம் 20 விழுக்காட்டைத் தொடும்,” என்று திரு அக்மல் நஸ்ருல்லா விளக்கினார்.

“மக்கள்தொகை மூப்படைவது தொடர்பில் நாடு வித்தியாசமான சவால்களையும் எதிர்கொள்கிறது. ஒரே வகையான உருமாற்றக் கட்டத்தைத் தாண்டிய வளர்ந்த நாட்டு மக்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது நமது வருமானம் குறைவாக இருப்பது அதற்குக் காரணம்,” என்றும் அவர் நாடாளுமன்றக் கீழவை அமர்வின் கேள்வி பதில் அங்கத்தில் தெரிவித்தார்.

தேசிய மூப்படைதல் வரைவுத்திட்டம்

மூப்படைந்த நாடாக மாறத் தயாராவதற்கான தேசிய மூப்படைதல் வரைவுத்திட்டம் (என்ஏபி) தற்போதைய நாடாளுமன்றக் கீழவை அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. அதன் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு திரு அக்மல் நஸ்ருல்லா இவ்வாறு பதிலளித்தார்.

என்ஏபி, அரசாங்கப் பரிசீலனையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இளையர்கள் முக்கிய நகரங்களுக்கு இடம் மாறும் போக்கினால் குறிப்பிட்ட சில குடியிருப்புப் பகுதிகளில் மக்கள்தொகை வேகமாக மூப்படைவதை அவர் ஒப்புக்கொண்டார். அதைக் கையாள நகர்ப்புற நிர்வாக அணுகுமுறைகள் போன்றவை மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் திரு அக்மல் நஸ்ருல்லா விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாமூப்படைதல்வயதுதிட்டம்