கொவிட்-19 தொற்றுடன் வாழ்தல்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் மலேசியா

கொவிட்-19 தொற்றுடன் வாழ்தல்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் மலேசியா

2 mins read
b38559b7-d730-41cf-8d45-4549d93ca9cc
மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது. - படம்: த ஸ்டார் இணையத்தளம்

கொவிட்-19 கிருமித்தொற்றுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டுக்கு மாறிவருவதால் அதன் தொடர்பில் புதிய விதிமுறைகளை அந்நாட்டுச் சுகாதார அமைச்சு விரைவில் வெளியிடவிருக்கிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பில் மறுஆய்வு செய்யப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை அமைச்சு வெளியிடும் என்று மலேசியச் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்திருக்கிறார்.

வீட்டுக் கண்காணிப்பு உத்தரவு, முகக்கவசப் பயன்பாடு, கிருமித்தொற்று இடங்களைத் தெரியப்படுத்துதல் போன்றவையும் மறுஆய்வு செய்யப்படுவனவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமல்படுத்தும் தேதி முடிவானவுடன் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் அந்த விவரங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவார் என்று அமைச்சர் சொன்னார்.

வீட்டுக் கண்காணிப்பு முன்னர் ஐந்து நாள்களாக இருந்தது. அறிகுறிகள் குறித்து ‘மைசெஜாத்ரா’ செயலி மூலம் தெரியப்படுத்துவதும் கட்டாயம். மறுஆய்வுக்குப் பிறகு அது மாறக்கூடும் என்றார் அவர்.

“கொவிட்-19 கிருமியை சளிக்காய்ச்சல் கிருமி உள்ளிட்ட இதர கிருமிகளைப் போன்றே கருதும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். பெருந்தொற்று என்ற நிலை மாறி அதனுடன் வாழப் பழகிக்கொள்ளுதல் என்ற நிலைக்கு மாற விரும்புகிறோம்,” என்று டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.

ஜூன் 27ஆம் தேதி அமைச்சின் ‘மலேசிய ஊட்டச் சத்து மாதம் 2024’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

உணவுமுறை சார்ந்த நோய்களைத் தடுக்கும் வகையில் மனப்போக்கை மாற்றுதல் என்பது அந்த நிகழ்ச்சியின் கருப்பொருள்.

உணவு சார்ந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்குரிய வகையில் பொதுமக்களின் மனப்போக்கை மாற்ற ஊக்குவித்தல், ஆரோக்கியமான உணவுமுறை, துடிப்புடன் வாழும் நடைமுறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் போன்றவை தொடர்பில் விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.

மலேசியர்களிடையே உடற்பருமன் பிரச்சினை அதிகரித்துவருவதாகக் கூறிய அவர், மலேசியர்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதற்கான உத்திபூர்வத் திட்டத்தை அமைச்சு விரைவில் தொடங்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்